தேனி: தேனி - திண்டுக்கல் சாலையில், பெரியகுளம் அருகே தர்மலிங்கபுரம் பகுதியில் திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதி, டிராக்டர் மற்றும் அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் உள்பட மொத்தம் 9 நபர்கள் மட்டுமே பயணித்த நிலையில், அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல் துறையினர், விபத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சாலையோரம் நிறுத்தப்பட்ட டிராக்டரின் பின்பக்கம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாமல் இருந்ததால், இரவில் வாகனம் நிற்பது தெரியாமல் அரசுப் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நல்லு, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டர் உரிமையாளர் மீதும், டிராக்டர் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த 9 பேரும், தற்போது பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்பத்தூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து!