சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றுகொண்டு, அவரின் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது, அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையில் நின்றுகொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த அவரின் ஆதரவாளர்களையும் மர்ம கும்பல் வெட்டியுள்ளனர். இதையடுத்து, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கைப்பற்றி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 பேர் கைது: இந்த கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
"தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தற்போது 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம் விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும். கொலை சம்பவம் நடந்த வெறும் நான்கு மணி நேரத்தில் 8 நபர்களை கைது செய்து உள்ளோம்.
கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கைதானவர்கள் பெயர் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. இந்த கொலை சம்பவத்தின் போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை கத்தியால் வெட்டி தான் கொலை செய்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து உளவுத்துறை ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஏற்கனவே ஆபத்து உள்ளதாக அறிக்கை கொடுத்ததாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அது குறித்து துரை ரீதியான விசாரணை உரிய நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பதில் அளித்தார்.
தலைவர்கள் கண்டனம்: பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் யார்? இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. பொன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BSP தமிழ்நாடு தலைவர் படுகொலை; கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்.. ஆதரவாளர்கள் சாலை மறியல்!