கரூர்: கரூர் மாவட்டம் அச்சமாபுரம் பகுதியில் உள்ளது, கெங்கல அம்மன் கோயில். இந்த கோயிலில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிலையில், கோயிலில் பணிபுரிந்த பழைய நிர்வாகிகளுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் இடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இரவு அச்சமாபுரம் கோயில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அசோக், சுகுமார், மணிவண்ணன், இதயகனி மற்றும் மாரியாயி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன் எனும் வேலுசாமி, தினேஷ் எனும் பெரியசாமி, விக்னேஷ், முத்தமிழ்செல்வன், சதீஸ் எனும் முருகன், சரவணன் ஆகிய 6 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கரூர் நீதிமன்றம், கடந்த 2022ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்ட்ட 6 பேரையும் விடுதலை செய்தது.
இந்த நிலையில், படுகாயம் அடைந்த சுகுமார், இந்த வழக்கில் 6 பேரை விடுதலை செய்த கரூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்த 6 பேருக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.