சென்னை: பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருபவர் சதீஷ்குமார் (45). இவர் பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது, அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புகைப்படம் எடுக்க முற்பட்டதாகவும், சாமி கும்பிட்டு விட்டு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என நடிகர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த பெண் சீரியல் நடிகரின் மொபைல் எண்ணைக் கண்டறிந்து தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், இதனால் அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை நடிகர் பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பெண் நேற்று நடிகரின் வீட்டுக்கு வந்து குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை நடிகரின் வீட்டு வாசலில் வைத்து விட்டு, நடிகரை கூப்பிட்டு உனக்கு செய்வினை செய்துவிடுவேன் என எச்சரித்து சென்றுள்ளார். இதனால் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீரியல் நடிகர் சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "படங்களே தயாரிக்காத தயாரிப்பாளர்களே..” சங்க நடவடிக்கையால் கடுப்பான விஷால்! - vishal explain rs 12 crore issue