சென்னை: மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைக் கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்தும் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் இன்று சென்னை அண்ணா சாலை ஜிம்கானா கிளப் முகப்பிலுள்ள காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை வரை நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையேற்றார். பேரணியை சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், சுதா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “பொய் பிரச்சாரங்கள், அவதூறுகளைப் பரப்பும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக இந்தப் பேரணியை நடத்துகிறோம். எங்கள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசாததை எல்லாம் பேசியதாக திரித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க: "அமைச்சரவை மாற்றம்: பொன்முடிக்கு ஏமாற்றம்; வெந்து போய் இருக்கும் துரைமுருகன்" - பற்ற வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
ராகுல் காந்திக்கு எதிராக வந்த பொய்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் தொடர்வோம். மகாத்மா காந்தி பிறந்தநாளுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன சம்பந்தம்? பாஜக ம்ற்றும் ஆர்எஸ்எஸ் அருவறுப்பான அரசியலில் இறங்கி உள்ளது. ஆர்எஸ்எஸ் கும்பல் நாட்டின் மத நல்லிணத்திற்கும், அவர்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவுக்கு கிடையாது” என்றார்.
இதையடுத்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டும், லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டும், காமராஜர் மறைந்த தினமான இன்று காந்தி சிலைக்கு மரியாதை செய்ய ஊர்வலமாகச் செல்ல உள்ளோம்.
கோட்சேவுக்கு மாலை மரியாதை செய்பவர்கள் எல்லாம் காந்தியைப் பற்றி பேசுகிறார்கள். 100 நாட்கள் தாண்டிவிட்டோம் என்று மோடி சொல்கிறார். மோடி இன்னும் 150 நாட்களில் நாடாளுமன்றத்திலிருந்து துரத்தப்படுவார்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்