சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கேரளா நிலச்சரிவில் பல உயிர்கள் இழந்துள்ளதை தொடர்ந்து, 300 நபர்களை காணவில்லை. அப்பகுதியில் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு மீட்புப் பணியை மிகவும் விரைந்து முடுக்கிவிட வேண்டும். தேசிய பேரிடர் பாதுகாப்புப் பணியினை அதிகப்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகள் எவ்வளவு கொடுத்தாலும் அது போதியதாக இருக்காது. இருந்தாலும் கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக அரசு சார்பாக 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார், அது வரவேற்கத்தக்கது. மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வயநாடு மக்களுக்கு உதவுவதற்கு வழங்க உள்ளோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடலூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் வயநாடு பகுதிக்கு மீட்புப் பணியில் உதவுவதற்கு விரைந்து செல்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொழிலதிபர்களுக்கு இந்த பேரிடரில் நேசக்கரம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உரையாற்றும் பொழுது, ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கூறியதற்கு, 'சாதி என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் சாதி கணக்கெடுப்பு பற்றி பேசலாமா?' என்று அவர் கிண்டல் அடித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற ஒரு ஆணவப்போக்கு அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. ஏற்கனவே இஸ்லாமிய சகோதரிகள் சாஜின் பாத்தில் போராட்டம் நடத்திய பொழுதும் அனுராக் தாகூர் கடுமையான வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது, சாதி மறுப்பு திருமணம் தொடர்ந்து ஆதரிக்கப்பட வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றால் தான் சாதிகள் அழியும் என கூறியுள்ளார். இப்படியிருக்கையில், தற்போது அனுராக் தாகூர் பேசியிருப்பது அனைத்தும் அம்பேத்கரின் கருத்துக்களுக்கு எதிரானவையாகும்" என்று கடுமையாக சாடினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "கர்நாடக முதலமைச்சர் சொல்வது போல் எதுவும் நடக்காது" - மேகதாது அணை விவகாரத்தில் கே.என்.நேரு பதில்!