சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றைய தினம் பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் முதலில் யார் வேட்பு மனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திமுக வேட்பாளருக்கு இரண்டாம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிமுக வேட்பாளருக்கு ஏழாம் எண் டோக்கன் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முதலில் வந்ததாகவும், திமுக வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி தாமதமாக வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் கலாநிதி வீராசாமியை முதலில் தேர்தல் அதிகாரி அழைத்துள்ளார். இதனையடுத்து கலாநிதி வீராசாமி வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்ற போது வெளியில் காத்திருந்த அதிமுகவினர் இது தொடர்பாகக் காவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து தேர்தல் அதிகாரி அறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த எங்களை நிற்க வைத்து விட்டு தாமதமாக வந்த அவர்களை வேட்பு மனு தாக்கல் செய்யச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனவும் இதில் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் சேகர்பாபு டோக்கன் வரிசைப்படி வேட்புமனுவைப் பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கூறினார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. டோக்கனில் வேட்பாளர்கள் பெயர் இருந்ததன் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியதன் அடிப்படையில் வருகை பதிவேடு பரிசோதிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ தரப்பினர் முதலில் வந்தது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் ராயபுரம் மனோ முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
குறிப்பாக இரு தரப்பினரும் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் குற்றம்சாட்டினர். பின்னர் வேட்பு மனு தாக்கலுக்கு பிறகும் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். மேலும் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வெளியிலும் தொண்டர்கள் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: தென் சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயவர்தனன், தமிழச்சி மற்றும் தமிழிசை.. - South Chennai Candidates Nomination