சென்னை: மே 18 இனப் படுகொலை நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இன்று மே-18 இனப் படுகொலை நாள். இதே நாளில், 2009ஆம் ஆண்டு முள்ளி வாய்க்காலில் போர் நடைபெற்றது. போரில் உயிர் இழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, தமிழக விடுதலைப் புலிகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் விடுதலைப் புலிகள் இல்லை, எங்களுக்கு எதற்காக தடை? எதற்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும்? தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்ற பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “போரில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் என கூறாதது ஏன்? கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம் என்று எதையும் சொல்லி பாஜகவால் மக்களிடம் வாக்கு கேட்க முடியவில்லை. பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பாஜகவுக்கு என்ன தெரியும்?” என்று விமரிசித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் ஒரு சில இடங்களில் சிசிடிவி பழுதானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பல இடங்களில் இது போன்று தொடர்ந்து நடக்கிறது. அதை பற்றி யோசிக்க வேண்டும். சவுக்கு சங்கர் பேசியது தவறு, அதனை மறுக்க முடியாது. அதற்கு குண்டாஸ், கஞ்சா வழக்கு போட்டுள்ளது தவறு. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கும் குடும்பங்கள் இருக்கின்றனர். ஆனால், அவரது பேச்சுக்காக பெலிக்ஸை கைது செய்வதில் என்ன நியாயம் உள்ளது?” என்றார்.
மேலும், “கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருந்த நிலையிலேயே அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். தமிழ்நாட்டில் தேர்தல் வரும் வரை மின்சாரம் சீராக கொடுப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன் துண்டித்து விடுவார்கள்” எனத் தெரிவித்தார். ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய கேள்விக்கு, இதை விட காமராஜரை கேவலப்படுத்த முடியாது என்றார்.
ராதிகா சரத்குமார் குறித்து இழிவாக பேசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “கேடு கேட்ட, கேவலமான, அநாகரிகமான அரசியலை தொடங்கியவர்கள் கருணாநிதி. இது செயல் அரசியலோ அல்லது சேவை அரசியலோ இல்லை, செய்தி அரசியல். திராவிட ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே கருணாநிதி குறித்து பாடப்புத்தகங்களில் இடம்பெறுகிறது. கொஞ்சம் நாட்கள் தான்.. அந்த பக்கங்களை கிழித்து எரிந்து தூர விசீ விடலாம்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகம், மாநாடு நடத்த உள்ளது, மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நான் போவேன். விஜயும் நானும் சந்திப்பதில் என்ன பிரச்னை? நாங்கள் என்ன கள்ளக்காதலா செய்கிறோம். நாட்டில் பிரச்னையே அண்ணனும், தம்பியும் சேரக்கூடாது என்பது தானே. 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணியா என கேட்டதற்கு, என் தம்பியின் பாணியிலேயே சொல்கிறேன் எனக் கூறி, வெயிட்டிங் என ஒரு வரியில் சீமான் பதில் அளித்தார்.
வெற்றி மாறன் போன்றவர்களால் தான் சாதி தலை தூக்குகிறது படன் எடுக்கத் தெரியாதவர் அவர் என்ற விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, இந்தியாவிலேயே தலை சிறந்த இயக்குநர் என் தம்பி வெற்றி மாறன். அவர் சிறந்த இயக்குநர் இல்லை என்றால், வேறு யார்?” என்றார்.
இதையும் படிங்க: டிரெண்டாகும் அமாவாசை : மீண்டும் அரசியல் திரைப்படத்தில் சத்யராஜ்? - Sathyaraj Starrer Role Of Modi