சென்னை: சென்னையைச் சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர், வழக்கறிஞர் தொழில் நடைமுறைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்கள்.
இதில் கடந்த 2008ம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, அந்த வழக்கில் 3 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, 2011ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் வழக்கறிஞர் சதிஷ்குமார் படுகொலை செய்யப்பட்டு இதுவரை கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ வழக்கில் தெரியாத நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது.
2013ம் ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற பணியை முடித்து வீடு திரும்பிச் சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து சாலையில் வைத்து கொடூரமான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதேபோல், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நடராஜன், கடந்த 2013ம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 2014ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த வழக்கறிஞர் நித்தியானந்தத்தை, 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. கடந்த 2015ம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய வழக்கறிஞர் தாக்கப்பட்டு வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்டார்.
மேலும், மாமல்லபுரத்திற்கு வழக்கு தொடர்ந்தவருடன் சென்ற வழக்கறிஞர் கமலேஷ், கடந்த 2015ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், இந்தாண்டு மட்டும் கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் ஜெய் கணேஷ், தென்காசி வழக்கறிஞர் அசோக்குமார், தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமாரை தொடர்ந்து கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வரை 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பகத்தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது.
வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதை தடுக்க
வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜூலை 12 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவையில் மீண்டும் ஓர் பயங்கரம்.. பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய காதல் மன்னன் சிக்கியது எப்படி?