சென்னை: சென்னை மாதவரம் கேகேஆர் கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவர் மருந்து விற்பனை (லைப் வேக்ஸ் ஸ்டோர்) கடை நடத்தி வந்துள்ளார். இங்கு தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் மருந்துக் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
மருந்துக் கடையிலிருந்த குளிர்சாதன பெட்டியில் 200க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்டிலில் இருந்த தாய்ப்பாலைக் கைப்பற்றிய உணவு பாதுகாப்புத் துறையினர், தாய்ப்பால் யாரிடமிருந்து, எப்படி பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அனுமதியின்றி வேறு ஏதேனும் பொருட்கள் விற்கப்படுகிறதா எனவும் சோதனை செய்தனர். அதில், வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பாராசிட்டமால் (ஊசி மூலம் செலுத்தும்) மருந்தும், தாய்ப்பாலுடன் கூடுதலாக கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த புரோட்டின் பவுடர்களையும், 100 மி.லி, 200 மி.லி பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடை உரிமையாளர் செம்பியன் முத்தையா போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி புரோட்டின் பவுடர் தயாரித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் மருந்துக் கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆன்லைன் மூலம் தாய்ப்பால் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட பாட்டில்களை ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பின்னர், மருந்துக் கடை உரிமையாளர் செம்பியன் முத்தையாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில்.. விரைந்து இயக்க கோரிக்கை! - Thoothukudi Train Service