கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சேர்ந்த விக்டர் (40) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும், விக்டர் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, பல ஆண்டுகளாக திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மே 18ஆம் தேதி வெளியில் சென்ற விக்டர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மேலும், விக்டரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கடந்த மே 27 ஆம் தேதி விக்டர் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று விக்டரின் செல்போன் குறிஞ்சிப்பாடி பகுதியில் கடைசியாக சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரகசியமாக அந்த பகுதிக்குச் சென்று கடைசியாக விக்டரிடம் பேசிய தட்சிணாமூர்த்தி என்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அப்போது தட்சிணாமூர்த்தி கூறியதாவது, ஆசிரியர் விக்டர் திருமணமாகாத தனது உறவுக்காரப் பெண்ணுடன் திருமண உறவை மீறிய பழக்கத்தில் இருந்து வந்தார். இது தொடர்பாக விக்டரை பலமுறை கண்டித்தேன், ஆனால் அவர் பெண்ணுடன் இருந்த பழக்கத்தை விடவில்லை. சம்பவத்தன்று குறிஞ்சிப்பாடிக்கு வந்த விக்டரை தாக்கியதில் அவர் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் நெய்வேலி டவுன்ஷிப் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் வீசிவிட்டு வந்ததாகவும், தற்போது போலீஸ் விசாரணையில் சிக்கிக்கொண்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது எலும்புக்கூடுகள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, எலும்புக்கூடுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தட்சிணாமூர்த்தியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் நடுரோட்டில் இருந்தவர் மீது பைக் ஏற்றிச் சென்ற நபர்.. இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்!