சென்னை : சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு மகா விஷ்ணுவின் நிகழ்ச்சிக்கும், பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் தொடர்பில்லை என்று பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சித்ரகலா மற்றும் உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக இக்குழுவின் தலைவர் சித்ரகலா செய்தியாளர்களிடம் கூறும்போது,"கடந்த மாதம் 24ம் தேதி கல்வி மேலாண்மை குழுவிற்கான மறு கட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக நாங்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், எங்களிடம் மகாவிஷ்ணு சொற்பொழிவை நடத்துவது குறித்து எவ்வித தகவலும் தரவில்லை.
பள்ளி மேலாண்மைக் குழு தான் நிகழ்ச்சி ஏற்படுத்தி தந்தது என்பது தவறான செய்தி. பள்ளி மேலாண்மைக் குழுவின் மறு கட்டமைப்பு தேர்தல் நடந்தும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று வரை கூட்டப்படவில்லை. பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைவர், துணைத் தலைவருக்கு கூட இது குறித்து செய்தி வரவில்லை என குற்றம் சாட்டினர்.
இது போன்ற நிகழ்ச்சிகளை பள்ளி மேலாண்மைக் குழு அனுமதிக்காது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் என்ற முறையில் நடைபெற்ற விசாரணையில், ஆணித்தரமாக எங்களுடைய கருத்துகளை சொல்லி இருக்கிறோம். எங்களுடைய பணி என்பது பள்ளியிலிருந்து இடைநிறுத்தமான மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல் அதேபோல, பள்ளி வளாகத்தில் ஏதேனும் பிரச்னை நடந்தால் அதை தீர்த்து வைப்பது தான் பள்ளி மேலாண்மைக் குழுவின் வேலை.
இதுபோன்ற நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடத்தக்கூடாது. இதுதான் பள்ளி மேலாண்மைக் குழுவின் நிலைப்பாடு. பள்ளியில் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மூடநம்பிக்கை நிகழ்ச்சி தொடர்பாக வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அசோக் நகர் அரசுப்பள்ளி சொற்பொழிவு சர்ச்சை எதிரொலி: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! - Spiritual Speech Issue