சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபத்தில் வெளியான மாணவிகளுக்கான பாலியல் தொந்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனைத்தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்தப் பிரச்சனை பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப அச்சமடையும் நிலையும் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் மாகவிஷ்ணு பேசிய விவகாரத்தை தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், இணை இயக்குநர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி கூறுகையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆதார் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவுபடுத்தி வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்திட வேண்டும். மேலும், வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக துவங்கப்படும் சேமிப்பு கணக்கு பணிகளை கண்காணித்து அப்பணிகளை விரைவுபடுத்தி நிறைவேற்றப்பட வேண்டும்.
இதையும் படிங்க: ஸ்டேட் Vs சென்ட்ரல்: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் நடப்பது என்ன?
பழைய கட்டடங்கள் அகற்ற நடவடிக்கை: பள்ளிகளில் பயனற்ற நிலையிலுள்ள பழைய கட்டடங்களை, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது காலாண்டு விடுமுறை துவங்கவுள்ள நிலையில் பள்ளி வளாகத்திலுள்ள செடிக்கொடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட வேண்டும்.
குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு நடவடிக்கை: மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு நீண்ட காலமாக விடுப்பிலுள்ள மாணவர்களை கண்காணித்தல் வேண்டும். மேலும், இடைநின்ற பெண் குழந்தைகள், குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படவும், குழந்தை தொழிலாளர்களாக மாறிவிடவும் வாய்ப்பு அதிகம் உள்ளதை மனதிற்கொண்டு இதில் தனிகவனம் செலுத்தி அக்குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க அறிவுறுத்த வேண்டும்.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை: போக்சோ போன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில் பள்ளிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் பாடத்திட்டங்களை நிர்ணயம் செய்யப்பட்ட கால அவகாசத்தில் நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்