திருச்சி: பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல், இது தொடர்பான கானொலியை வெளியிட்டதற்காக தனியார் யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி போலீஸ் காவல் எடுக்கப்பட்டார். இந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து மருத்துவப் பரிசோதனையும் முடிந்த பின்பு, மீண்டும் இன்று மாலை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜரான சவுக்கு சங்கரிடம், விசாரணை முறையாக நடத்தப்பட்டதா, உங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டதா என நீதிபதி கேட்டார். அதற்கு சவுக்கு சங்கர், அனைத்தும் வழங்கப்பட்டது, விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை என்றார்.
மேலும், “கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்னை ஏற்படுவதால் மிகுந்த மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும், தனி வார்டு, சென்னை அல்லது திருச்சியில் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதனை நீதிபதி மனுவாக வழங்குங்கள், பரிந்துரை செய்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஏற்கனவே கோவை நீதிமன்ற உத்தரப்படி மே 28ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் உள்ளதால், கோவை சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பின்னர், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "நேற்று மாலை 4 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம் கஸ்டடிக்கு எடுத்துச் சென்று, ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். நாங்களும் அவரிடம் கேட்டோம். பிரச்னை ஏதும் இல்லை என அவரே தெரிவித்தார்.
இன்று 4 மணிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்று, கோவை சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளார். மேலும், திருச்சியில் அவர் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அது என்னோட வாய்ஸ் இல்லை" - நடிகர் கார்த்திக்குமார் போலீஸ் துணை ஆணையரிடம் புகார்! - Actor Karthik Kumar Complained