சென்னை: 18வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தற்போது தமிழகத்திலுள்ள 39 வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த வாக்கு இயந்திரங்கள் அருகிலுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும். இந்த வாக்கு இயந்திரங்கள் 45 நாட்கள் வைத்த பின்னர் ஃப்ரோசன் செய்யப்படும்” எனக் கூறினார்.
விருதுநகர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது குறித்து தேமுதிக சார்பில் எந்த புகாரும் வரவில்லை என அவர் தெரிவித்தார். மேலும், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் வழக்காக நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என்றும், இதில் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தற்போது வரை எந்தவித தகவலும் வரவில்லை எனவும், ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்! - Premalatha Vijayakanth