சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த சாந்தன் திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். கல்லீரல் பாதிப்பினால் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(பிப்.28) காலை சாந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்தியர்கள் உட்பட இலங்கையர்களும் பலர் கைது செய்யப்பட்டனர்.
அதில் இலங்கையர்களான சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலை செய்யப்பட்டாலும், இலங்கைக்குச் சாந்தன் உள்ளிட்டவர்களை அரசு அனுப்பி வைக்கவில்லை.
இலங்கைத் தமிழர் சிறப்பு முகாம்: சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள், நைஜீரியா, பல்கேரியா, வங்காள தேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
அந்த வகையில், சாந்தன் உள்ளிட்ட இவர்கள் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும், சாந்தன் இலங்கை செல்வதற்காக மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்தது. ஆனால் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் அனுப்பப்படுவார் என்றும், சாந்தன் விரைவில் இலங்கை செல்ல விமான டிக்கெட் வழங்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் சாந்தனின் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை.
இதையும் படிங்க: "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தது பாக்கியம்" - பிரதமர் மோடி