விருதுநகர்: திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் உள்ள கண்ணகி காலனியை sசேர்ந்த தம்பதி சித்திரைவேல் - பெருமாள் அம்மாள். சித்திரைவேல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களுக்கு சப்பானி முத்தையா என்ற 25 வயதுடைய மகன் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சப்பானி முத்தையா தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் சப்பானி முத்தையாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டியைச் செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார். அப்போது அவரது தாயார் பெருமாள் அம்மாளை வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது கடனை அடைக்க உதவி புரியுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து வேலைக்குச் செல்ல மறுத்து, பெருமாள் அம்மாள் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மைப் பணியாளர் சப்பானி முத்தையா மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர், இது குறித்த தகவல் அறிந்தவுடன் உறவினர்கள் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சப்பானி முத்தையாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெருமாள் அம்மாள் அளித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா, தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், வாழ விரும்பினாலும் கடன் பிரச்னையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது ஜீப் மோதல்.. விருதுநகரில் 3 பேர் உயிரிழப்பு! - Virudhunagar Tea shop accident