சென்னை: பங்குச் சந்தையில் அதானி முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதனை முறையாக விசாரிக்கவும், செபி தலைவரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மகனுமான சந்தீப் தீக்ஷித், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "உலகின் 6வது பெரிய பங்குச்சந்தையாக இந்திய பங்குச்சந்தை விளங்குகிறது. அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் செயற்கையாக உயர்ந்தது. அதானியின் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளில் செபியின் தலைவர் முதலீடு செய்துள்ளார். பங்குகள் செயற்கையாக உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கே ஆபத்தானது.
செபியின் தலைவராக தனியார் நிறுவனத்தை நடத்தியவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. அதானியின் பங்குகள் உயர்வு மற்றும் செபியின் தலைவர் முதலீடு செய்துள்ளது குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவராது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டு, செபியின் தலைவர் பதவியிலிருந்து மாதபி புச்-ஐ நீக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : செபிக்கு அடுத்த தலைவலி.. 'அதானி குறித்த விசாரணை என்னாச்சு?' உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு! - hindenburg adani case