சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஏழாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
அந்த வகையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக இன்று (செப்.16) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால், இன்று மாவட்ட ஆட்சியரை இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிடக் கோரி பேரணியில் ஈடுபட இருந்தனர்.
இதையும் படிங்க: பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
ஆனால் இதில் பங்கேற்க வந்த 100க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடையும் முன்னே பேரணியில் இருந்த சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.