சேலம்: தமிழ்நாட்டில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97.45 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இதனையடுத்து, 97.42 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் 2வது இடத்தையும், 97.25 தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் 94.60 சதவிகித மாணவ, மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், சேலம் குகை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சிவானி ஸ்ரீ என்ற மாணவி, பொதுத்தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உயர் கல்வி வழிகாட்டுதலின் படி பயிற்சி பெற்று, எச்.சி.எல் (HCL - Hindustan Computers Limited) நிறுவனத்திற்குத் தேர்வாகியுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலமாக இன்டர்ன்ஷிப் (internship) பெறுவதோடு, உயர்கல்வியும் பயிற்சி மேற்கொள்ள தேர்வாகி உள்ளார்.
இதனையறிந்த சக மாணவிகள் சிவானி ஸ்ரீ மாணவிக்கு இனிப்புகளை ஊட்டி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதுகுறித்துப் பேசிய மாணவி, ’’நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகப் பயிற்சி பெற்று மிக பெரிய நிறுவனத்திற்குத் தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தியமைக்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ள க்யூட் (cute) தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று கொண்டுள்ளது. இதனால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று மாணவி சிவானி ஸ்ரீ தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்து அசத்திய மாவட்டம் எது? - Tn 12th Result 2024