சேலம்: தமிழ்நாடு அரசு 2 முறை கடிதம் அனுப்பியும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்போதைய பதிவாளர் தங்கவேல் எந்த வித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல், கடந்த மாதம் இறுதியில் பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இன்று (மார்ச் 22) முன்னாள் பதிவாளர் தங்கவேல், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், தான் பதிவாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருட்கள் வாங்கியது, போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது, அரசியல் தலையீடு, மாணவ மாணவிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்தது மற்றும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பட்டியலிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மீது பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்ததால், அவருக்கு எதிராக சிலர் பொய்யான புகார்களை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளனர். மேலும், பழனிச்சாமி ஐஏஎஸ் தலைமையிலான குழுவினர் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரையிலும், ஒரு நாள் கூட அந்த குழுவினர் என்னை நேரில் அழைத்து விசாரிக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரத்துடன் நிரூபணமானால், அதை சட்டப்படி சந்திப்பேன்" என தெரிவித்தார்.
அதனை அடுத்து, பூட்டர் பவுண்டேஷன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அது பற்றிய எனது கருத்துக்களைச் சொல்ல முடியாது" என்று பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், "பொறுப்பு பதிவாளராக பதவி வகித்த போது ஏராளமான புகார்கள் என்னிடம் வந்தன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உயர்கல்வித்துறை அதிகாரிகள் என்னை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைவேந்தர் ஜெகநாதனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை.
இதுமட்டுமல்லாது, பல்கலைக்கழகத்தில் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. இதை தணிக்கை துறைதான் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால், எனது தலைமையிலான கமிட்டிதான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது. நாங்கள் செய்த நல்லவை எல்லாம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: நிறைவடைந்தது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! - 12th Public Exam Result Date