சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை அடைந்தன.
இதனையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.65 லட்சம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் உள்ள அருவிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை: கடந்த ஜூலை 16ம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 11 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து இன்று 117 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1.55 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில மணி நேரங்களில் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் திறப்பு: முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
*நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரைப் பகுதிகளான பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திருமதி. Dr. ச. உமா, ஆய்வு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை*.
— AIR News Trichy (@airnews_trichy) July 29, 2024
*வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது* pic.twitter.com/GqosVOwXOL
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் சார்பில், ஒலிபெருக்கி மூலம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காப்புக் காடுகளையும் கவனிக்க அரசு முன் வருமா? புலிகளைக் காப்பதில் அடுத்த நகர்வு என்ன?