சேலம்: திமுக இளைஞரணியின் இரண்டாம் மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (ஜன.21) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்காக, தடபுடலாக அசைவ மற்றும் சைவ உணவுகள் இரவு பகலாகத் தயாரிக்கப்பட்டது. மட்டன் பிரியாணி, சில்லி சிக்கன் உள்ளிட்ட ஐந்து வகைகள் அடங்கிய அசைவ உணவுகளும், சைவத்தில் வெஜ் பிரியாணி, கோபி சில்லி உள்ளிட்ட நான்கு வகைகளும் பேக்கிங் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே உணவு வழங்கும் இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒருவருக்கு ஒருவர் வரிசையில் நின்று உணவுகளை வாங்கி வருகின்றனர். ஒவ்வொருவரும் இரண்டு மூன்று பிரியாணிகளை வாங்கி வருவதால் உணவு வழங்கும் இடத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுச் சிறப்பு உரை மற்றும் தீர்மானம் குறித்துப் பேசினார்.
அப்போது ஒரு பகுதியில் மட்டுமே மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தன.
காலையிலேயே மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது இம்மாநாட்டு. மேலும், உணவு வழங்கும் இடத்தில் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவமும் அரங்கேறியது. அதே நேரத்தில் பிரியாணி பொட்டலங்களை முழுமையாகக் குப்பைத் தொட்டிகளில் போட்டு விட்டுச் சென்ற அவலமும் அரங்கேறியது. அந்த குப்பைத் தொட்டிகளை உடனுக்குடன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்று குப்பை வண்டிகளில் ஏற்றிச் சென்று அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் பதவியை நீக்க தீர்மானம் - சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முன்மொழிந்தார் உதயநிதி ஸ்டாலின்!