சேலம்: மக்களின் இன்றியமையாத தேவைகளுள் ஒன்று குடிநீர். இந்தியாவின் குடிநீர் சேவை நகர்புறம் முதல் குக்கிராமம் வரை சென்றடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் குடிநீர் இயக்க திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றுள் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டின் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல் படுத்திய மாவட்டமாக சேலம் மாவட்டம் தேசிய அளவில் 86.44 புள்ளிகள் பெற்ற முதல் இடத்தை பெற்றுள்ளது.
குடிநீர் இயக்க திட்டதில் முதலிடம் புடித்த சேலம்: கடந்த ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற சென்னை தலைமை செயலக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கான சான்றிதழ் மற்றும் விருது சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவியிடம் வழங்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் இன்று ஜூன் 17ஆம் தேதி அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேருவை நேரில் சந்தித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து பெற்றார்.
சேலம் ஊரக குடிநீர் திட்டம் செயல்பாடுகள்: சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் 385 ஊராட்சிகளும், அதில் 5109 குக்கிராமங்களும் உள்ளது. இந்த ஊராட்சிகளுக்கு, ஊரக குடிநீர் இயக்க திட்டமான (JJM 2020-21 மற்றும் New SVS திட்டத்தில் 1272 பணிகள், MVS திட்டத்தில் 1294 பணிகள்) மற்றும் ஒருங்கிணைத்த 14வது மற்றும் 15வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6லட்வத்து 47 ஆயிரத்து 476 வீடுகளில் இதுவரை 5லட்சத்து 40ஆயிரத்து 905 வீடுகளுக்கு அதாவது 83.54 விழுக்காடு வீடுகளில் தனி நபர் இல்லக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2022 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் 7 ஆயிரத்து 307 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 4632 மினி குடிநீர் தொட்டிகள், ஊராட்சியின் சொந்த குடிநீர் ஆதாரங்கள் மற்றும் 2566 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாகவும், ஏற்காடு ஒன்றியத்தில் உள்ள 103 ஊராட்சிகளில் சொந்த குடிநீர் ஆதாரங்கள், SVS திட்டம் மூலமாகவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்களால் குடிநீர் பரிசோதனை (Field Test Kit) செய்யப்பட்டு தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் (55 LPCD) என்ற அளவில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இதுவரை 260 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்குழு (14th, 15th CFC) திட்டத்தில் 36 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 72 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டும் பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மீதமுள்ள 1 லட்சத்து 6ஆயிரத்து 571 வீடுகளுக்கு 2024ஆம் ஆண்டின் டிசம்பர் 31அம் தேதிக்குள் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட தொடர் நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விவசாயிகள் இனி கவலை வேண்டாம்: விவசாய கருவிகள், இயந்திரங்களை வாடகைக்கு பெற புதிய வசதி அறிமுகம்!