சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வி.என் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நதியா (33). இவர் சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் விற்பனை மற்றும் பழுது நீக்கும் நிறுவனத்தில் கணக்காளராக மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தங்கள் நிறுவனத்திற்கு சர்வீஸ் செய்வதற்காக வரும் கார்களின் வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்தை, தவறான கணக்கு எழுதி மோசடியில் ஈடுபட்டுவருவதாக அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, நதியாவிடம் நிறுவன நிர்வாகம் விசாரணை செய்தது.
அந்த விசாரணையின் போது ஆறு மாதமாக, 111 வாடிக்கையாளர்களின் வாகனங்களை பழுதுபார்த்து பெறப்பட்ட பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல், பகுதி பகுதியாக 12 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயை நதியா கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, நிர்வாகம் சார்பில் பணத்தை திருப்பி செலுத்துமாறு கேட்டபோது நதியா ரூபாய் 25,000 மட்டுமே கட்டியுள்ளார். மீதி பணத்தை தராமல் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: உண்டியல் பணம் கையாடல்; தூத்துக்குடி தலைமை பெண் காவலர் அதிரடியாக சஸ்பெண்ட்..!
தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மேலாளர் இளவரசன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலிடம் நிறுவனத்தில் அரங்கேறிய கையாடல் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அவர் இந்த புகாரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
இதன் பேரில் காவல் ஆய்வாளர் பாரதி மோகன் தலைமையில் தனிப்படை அமைத்து, இது குறித்து விசாரித்த காவல்துறையினர், நதியா மோசடி செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக நதியாவை விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் நிறுவன மேலாளர் காவல்துறையினரிடத்தில் புகார் அளித்ததை அறிந்து தலைமறைவானார்.
இந்த நிலையில், நதியா தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினர் நேற்று (டிசம்பர் 7) தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் தஞ்சாவூர் சென்று அங்கு பதுங்கி இருந்த நதியாவை நேற்றிரவு கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.
அங்கு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நதியா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.