திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வேப்பன் வலசிற்கு செல்லும் 16ஆம் எண் கொண்ட அரசுப் பேருந்து (TN57 N 1286), வழக்கம்போல் சுமார் 30க்கும் மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்டு வேப்பன் வலசு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று சென்று சாலையில் வீடுகளின் அருகே இருந்த பெரிய சாக்கடையில் விழுந்துள்ளது.
அதையடுத்து பேருந்தின் சக்கரம் கழன்றதில் நிலை தடுமாறிய பயணிகள் கூச்சலிட்டு அலறியுள்ளனர். அதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால், யாருக்கும் எவ்வித காயமும் இன்றி தப்பினர். முன்னதாக, அரசுப் பேருந்துகள் குறித்து புகார்கள் குவிந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தர சோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
அதற்கான பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக போக்குவரத்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.