மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ரா பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேர் காயமடைந்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். விடுதியில் இருந்த மாணவிகள், தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு தற்போது தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ளார்.
தற்போது விடுதியில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து பெண்களும் டவுன்ஹால் ரோட்டில் உள்ள மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை தீ விபத்து: தனியார் விடுதியை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? செல்லூர் ராஜு கேள்வி; அமைச்சர் பிடிஆர் விளக்கம்!
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உரிய மாற்று ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம். அவர்களை வெவ்வேறு விடுதிகளில் தங்க வைப்பதற்கு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் பலர் தங்களின் உடைமைகளை அந்த விடுதியிலேயே வைத்துவிட்டு வந்துள்ளனர்.
தற்போது அவர்களை நேரடியாக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று பொருட்களை மீட்டு வருகிறோம். தொடர்ந்து, விடுதியில் இருந்த அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். தேவைப்படும் பெண்களுக்கு மாற்று விடுதிகள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.