சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு பொய்யைப் பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என மோடி நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், நிச்சயம் அது ஈடுபடாது.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் தெளிவான பதிலை அளித்து விட்டார். தமிழகம் கேட்கின்ற நிதியைக் கொடுக்க மனம் இல்லாத பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்ப இம்மாதிரியான நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஏதோ நாங்கள் நேற்று கச்சத்தீவைக் கொடுத்தது போல இன்றைக்கு இது குறித்துப் பேசி வருகிறார். 1974 ல் நடந்தது.
அன்றைக்கு இதற்கு எதிராக எங்களுடைய தலைவர் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தீர்மானத்தோடு நிறுத்தி விடாமல் தமிழக முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த வரலாறு எல்லாம் இவர்களுக்குத் தெரியவில்லை. 50 வருடங்கள் ஆகிவிட்டது. என்ன பொய் சொன்னாலும், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
தோல்வி பயத்தின் காரணமாக, கலர் கலராக பொய்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் இனத்தை அழிக்க நினைத்த இலங்கை இன்றைக்குத் திவாலாகி பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது. அப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்குப் பிச்சை போட்டவர்தான் பிரதமர் மோடி. மத்திய அரசு நிதியிலிருந்து ஏறத்தாழ 34 ஆயிரம் கோடி இலங்கைக்குக் கொடுத்துள்ளார். அப்போது, அவர் கேட்டு வாங்கி இருக்கலாமே கச்சத்தீவை.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அமித் சாவின் மகன் இடம்பெற வேண்டும் என்று முயற்சி எடுத்த மோடி மீனவர்கள் நலன் காப்பதற்காகக் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டியது தானே. நேற்றைய தினத்தில் மிகப்பெரிய ஒரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளித்து பல நாட்கள் ஆகிறது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் குடியரசுத் தலைவரை அழைத்துச் சென்று பாரத் ரத்னா விருதை அளித்துள்ளார்கள்.
ஏனெனில் தோல்வி பயமே காரணம். குஜராத்தில் காங்கிரசும் ஆம் ஆத்மி இணைந்து விட்டார்கள். அதனால், மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டது. அத்வானிக்கு பாரத ரத்னா அளித்து அதன் மூலம் அத்வானிக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை தன் பக்கம் திருப்பலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால், அது நடக்காது நிச்சயமாகத் தோல்வியே அவர்களுக்குப் பரிசாகக் கிடைக்கும்" என்றார்.