புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் மற்றும் நகர திமுக சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நேற்று (பிப்.12) திலகர் திடலில் நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துக்கொண்டார், அப்போது மேடையில் பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்திய தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அந்த காலத்தில் எம்ஜிஆர் வரும்போது மக்கள் வீதிகளில் நின்று பார்த்தது போல, தற்போது உதயநிதி ஸ்டாலின் வருவதை மக்கள் பார்க்கிறார்கள்.
நாடெங்கும் பெரியாருக்கு சிலைகள்: 10 ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அம்பேத்கர் சிலை அருகே பெரியார் சிலை நிறுவப்படும். அதை திறந்து வைப்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மத்திய அரசின் முழு கவனமும் தமிழகத்தின் மீது உள்ளது. எனவே, திமுகவினர் கவனமாக இருக்க வேண்டும். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. அவர் தமிழகத்தில் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி” எனக் குற்றம்சாட்டினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா போக முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை அளித்து வருகிறோம். சட்டப்பேரவைக்கு, ஆளுநர் வரும்போது விதிமுறைப்படி, தேசிய கீதத்தை பேண்டுசெட் வாத்தியத்தின் மூலம் ஒலிக்க செய்தோம். பின்பு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினோம். இதில் என்ன குற்றம் உள்ளது?.
தேசிய கீதத்தில் வரும் திராவிடம்: தேசிய கீதத்தில் இவ்வளவு பாசம் உள்ள ஆளுநர், 'திராவிடம்' என்ற சொல் இல்லை என்றார். ஆனால், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதத்தில், 'திராவிட உத்கல வங்கா' என்றும் வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடக்கூடாது என்று யார் கூறினாலும், அவர்கள் இந்த சமுதாய இனத்திற்கு விரோதிகள் என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும். ஆளுநர் எதிராக திமுக எவ்வித போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை.
பொன்முடியின் அமைச்சர் பதவியும் போகும்: அமைச்சர் செந்தில் பாலாஜி, பதிவியை ராஜினாமா செய்துள்ள விவகாரம், முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு இடைப்பட்ட விவகாரம். மார்ச் 5 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு வந்தப் பிறகு அமைச்சர் பொன்முடியின் பதவி நீக்கப்படும் என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் உண்மையைப் பேசுவதில்லை. உயிரோடிருக்கும் ஆற்காடு வீராச்சாமி இறந்துவிட்டார் என்று கூறியவர் அவர்.
விஜய்யின் அரசியல்; அனைவரும் தேசிங்குராஜாவாக முடியாது: நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளது குறித்து, உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தப் பின்னர், சினிமாவில் உள்ளவர்களின் அரசியல் வருகை அதிகமாக உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, செஞ்சிக் கோட்டை ஏறுபவர்கள் அனைவரும் தேசிங்குராஜாவாக முடியாது” எனப் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!