சென்னை: கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இவர்கள் மீது சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரம், அவர்கள் மேல் உள்ள வழக்குகள் விவரம், மேலும் அந்த நபர்கள் தனித்தனியாக அளித்த வாக்குமூலங்கள் என காவல்துறை விசாரணை அறிக்கையும் இணைத்து குற்றப்பத்திரிக்கியை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ள வடசென்னை ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடி இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் கூறப்படும் நிலையில், போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவர் அளித்த வாக்குமூலங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குமூலம்: "ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அனைத்து செலவுகளையும் தான் பார்த்துக் கொள்வதாக நாகேந்திரன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பவர் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனை அணுகி ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும்;
அதற்கு அஸ்வத்தாமன் இதுகுறித்து சிறையிலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைக்கு அவரது தந்தை நாகேந்திரனை அழைத்து வந்த போது அவரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு நாகேந்திரன் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வேண்டும் எனவும், அதற்கான முழு செலவையும் நாம் பார்த்துக் கொள்ளலாம் என அவரது மகன் மூலம் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும்" குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "ஐயூசி எனப்படும் தனியார் ஒப்பந்ததாரரான ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில், நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதற்குப் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் தான் இருந்ததாகவும், அதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாகவும், அவரது ஆதரவாளர்களை அழைத்து தனது மகனுக்கு ஏதாவது ஆகினால் தான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன் என எச்சரித்ததாகவும்" குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்