தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டியைச் சேர்ந்த ரவுடி விஎஸ்எல் குமார் என்ற முருகையன் கடந்த ஆண்டு அக்.31ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முருகையன் மனைவி கீதா தோகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து தோகூர் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதற்கிடையில், கொலை வழக்கில் தேடப்பட்ட பவுசு செந்தில் (35), கொடியரசன் (27), பிரவீன் (24), விஜய் (27), கமல் (24), குமரவேல் (21) ஆகிய 6 பேரும் கோயம்புத்தூர் அருகே சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் சரணடைந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரான சாமி ரவி, திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று இரவு (ஜூலை 15) சரணடைந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சாமி ரவி, "இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.
இறந்து போனவரின் மனைவி ஒரு அப்பாவி. அவருக்கு வெளி உலகம் தெரியாது. அவர் யாரோ சொல்லிக் கொடுத்து தான் எனது பெயரில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையும் எனது மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களில் என் மீது இது போன்ற எந்த வழக்குகளும் கிடையாது. நான் தொடர்ந்து வழக்குகளில் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். இப்பொழுது காவல்துறையினர் தீவிரமாக இருப்பதாலும், சூழ்நிலை வேறுமாதிரி இருப்பதால் நான் காவல் நிலையத்தில் சரணடைகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமாக நடக்கும்" - திமுக நிர்வாகிக்கு வந்த கொலை மிரட்டல்!