கோயம்புத்தூர்: உலகெங்கும் தசைநார் சிதைவு எனப்படும் மரபணு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தசைநார் சிதைவு நோய்க்குச் சிகிச்சை அளிக்க ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 12 கோடி வரை செலவாகும்.
இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க, பெற்றோர்கள் அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் உதவியை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பெரும் பொருட்செலவாகும் என்ற நிலையில், அரசின் கவனத்துக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சைக்கான மருந்துகள் வரிச்சலுகையுடன், கழிவு விலையில் கிடைத்து வருகின்றன.
மேலும், தன்னார்வ அமைப்புகள் மூலம் க்ரவுட் ஃபண்டிங் (Crowdfunding) முறையில் நிதி திரட்டப்பட்டு, அந்த நிதியைக் குலுக்கல் முறையில் தசைநார் சிதைவால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் ஆப் இன்ஃப்ரா (Rotary Club of Infra) என்ற தன்னார்வ அமைப்பு டர்ஃப் (Turf) மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் நிதியைச் சிகிச்சைக்கு வழங்க முடிவெடுத்தனர்.
அதன்படி, கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில், கிரிக்கெட் போட்டி நேற்று(ஏப்.28) நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் மற்றும் அவிநாசியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.
இதுகுறித்து ரோட்டரி கிளப் இன்ஃப்ரா அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் காமராஜ் கூறுகையில், "தசைநார் நோய் சிதைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையிலும், நிதி திரட்டுவதற்காக இந்த கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறோம். இதில், கிடைக்கும் நிதியைத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை மற்றும் வாழ்வை மேம்படுத்த முழுமையாக வழங்குவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் மரணம்; தனியார் மருத்துவமனையில் மீண்டும் விசாரணை! - Investigation On Youth Death