மதுரை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் தூறலாக தொடங்கிய மழை விடாமல் இரவு வரை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் மதுரை மாநகர் மட்டுமன்றி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பொழிவு இருந்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மூழ்கின.
குறிப்பாக மதுரை மணி நகரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கர்டர் பாலத்தின் கீழ் பகுதி பள்ளம் என்பதால் மழை நீர் முழுவதும் நிறைந்து காணப்பட்டது. இதற்குள் சென்ற காவல்துறை வாகனம் மற்றும் இன்னொரு காரும் மூழ்கின. அதற்குள் இருந்த நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நேற்று இரவு 10 மணியளவில் பலத்த இடியுடன் பெய்த கனமழை நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு - மதுரையைக் கலக்கும் போஸ்டர்!
குறிப்பாக மதுரை ரயில் நிலையம், ஆரப்பாளையம், அண்ணா நகர், சிம்மக்கல், மாட்டுத்தாவணி, ஆனையூர், திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம், பழங்காநத்தம், அவனியாபுரம், வில்லாபுரம், விமானநிலையம் பெருங்குடி, திருநகர் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
இந்நிலையில் மழை நீர் தேங்கிய மணி நகரம் கர்டர் பாலத்தை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் பார்வையிட்டு அங்குள்ள தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். அப்பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு காவல்துறையால் பாதை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்