திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆன நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக நெல்லை மாவட்டம் முழுவதும் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதாவது பொது மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில் தாமதமாவதாகவும் பலருடைய மனுக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் புகார் வந்துள்ளது. எனவே மக்களின் மனுக்கள் மீதும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மீதும் உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஆட்சியரின் உத்தரவை மீறி பலர் தங்கள் பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் வருவாய்த் துறையில் பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது 17பி சட்டத்தின் கீழ் ஆட்சியர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த 17 சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் முதற்கட்டமாகச் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது அவர்கள் தாங்கள் தவறு செய்யவில்லை என ஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதே சமயம் ஊழியர்கள் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அதிகபட்சம் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆட்சியர் கார்த்திகேயன் நடவடிக்கையால் அதிர்ந்து போன நெல்லை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தற்போது அவருக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.20) நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்திருந்தனர். அதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்களும் இன்று (பிப்.20) கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் சார்பில் பிரத்தியேகமாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பேசியது. அப்போது, "வேலை செய்யாமல் ஓபி அடித்தால் வேறு என்ன செய்ய முடியும். வேலை செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை.
தொடர்ச்சியாக முறைகேட்டில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் குறித்த செய்திகளை நீங்களே பார்த்திருப்பீர்கள். அது போன்று பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பலர் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனப் புகார் வந்தது.
பத்து ஆண்டுகள் வரை ஃபைகல் தேக்கமடைந்து இருக்கிறது. இப்படி இருக்கையில் அது சம்பந்தமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேறு என்ன செய்வது. இது முதல் கட்டம் தான். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அப்போது அவர்கள் தவறு செய்யவில்லை என நிரூபித்தால் 17பி சட்டம் ரத்து செய்யப்படும். அதே நேரம் சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களும் இருக்கிறார்கள். ஆனால் வேலை செய்யாமல் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் தான் மக்களுக்கு அரசு சேவை முறையாகக் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி மாரிராஜ் என்பவரிடம் ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்ட பேசிய போது, "ஆட்சியர் கார்த்திகேயன் சின்ன சின்ன விஷயங்களுக்கு 17பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார். 17பி சட்டம் என்பது மிகப்பெரிய தவறுகளுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை.
அரசுப் பணத்தைக் கையாளுதல் போன்ற பெரும் குற்றச்சாட்டுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை தான் 17 பி சட்டம். ஆனால் ஆட்சியர் கார்த்திகேயன் விடுமுறை எடுப்பதற்கும் மருத்துவ விடுமுறை கேட்டு தாமதமாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கும் 17பி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
ஆட்சியர் நடவடிக்கையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறும் பெண் ஊழியர் ஒருவர் மீது 17பி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் அவருக்குக் கிடைக்கும் பல்வேறு பலன்கள் பாதிக்கப்படும். எங்கள் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.
கடைநிலை ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனக்குச் சமமான அதிகாரி மீதும் நடவடிக்கை எடுத்துப் பரபரப்பு ஏற்படுத்தியவர் தான் ஆசிரியர் கார்த்திகேயன். அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநராகப் பணிபுரிந்த ஐஎஃப்எஸ் அதிகாரி செண்பகப்பிரியா கடந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவின் போது பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்லப் பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.
வழக்கமாகக் கோயிலுக்கு ஆடி அமாவாசைக்கு ஐந்து நாளுக்கு முன்பே பக்தர்கள் படையெடுப்பார்கள். ஆனால் ஒரு நாட்களுக்கு முன்பு தான் பக்தர்களுக்கான அனுமதி அளிக்கப்படும் என்பது உட்படப் பல்வேறு கட்டுப்பாடுகளை செண்பகப்பிரியா விதித்திருந்தார். இது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து ஆட்சியர் கார்த்திகேயன் துணை இயக்குநர் செண்பகப்பிரியா விடம் தேவையில்லாமல் பொதுமக்களைத் துன்புறுத்த வேண்டாம். அவர்களின் மதச் சடங்குகளுக்குத் தடையாக இருக்க வேண்டாம். அவர்கள் வழக்கம்போல் வந்து செல்லட்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் ஆட்சியரின் பேச்சைக் கேட்காமல் செண்பகப்பிரியா தனது உத்தரவில் திட்டவட்டமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கார்த்திகேயன் சிறப்பு அரசாணை கீழ் கோயிலுக்கு வழக்கம் போல் பக்தர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பே செல்ல உத்தரவிட்டார். இது போன்று அதிரடிக்குச் சொந்தக்காரரான ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராகத் தான் தற்போது அரசு ஊழியர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்ட நடவடிக்கை பாயும்! - அதிமுக முன்னாள் நிர்வாகியின் அவதூறுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி