திருச்சி: அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுடன் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம் துறையூரில், சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், துறையூர் - திருச்சி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் பயன்படுத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியது. மேலும், இதனை கடைக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களையும் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சி துறையூர் தனியார் உணவகத்தில் சத்துணவு முட்டைகள்.. உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை!
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உத்தரவின் பேரில் துறையூர் துணை வட்டாட்சியர் மோகன் தலைமையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சத்துணவு முட்டையை விற்பனை செய்த உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அரசின் சத்துணவு முட்டைகள் உணவகத்தில் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், உணவகத்தில் இருந்து 115 முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்க அளிக்கப்பட்ட முட்டைகளை கடைக்கு விற்பனை செய்ததாக மதுராபுரி ஊராட்சி ஒன்றிய சத்துணவு அமைப்பாளர் வசந்த குமாரி, உணவக உரிமையாளர் ரத்தினம் ஆகியோரை துறையூர் போலீசார் கைது செய்ததுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.