சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்படி,
- கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- வரவிருக்கும் தேர்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள பூத் கமிட்டி அத்தியாவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.
- பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களைய அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும்.
- போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதுணையாக நிற்கும்.
- சமூகநீதித் திட்டங்களை முறையாக அமல்படுத்த சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட வேண்டியது அவசியம். சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- தமிழ்நாடு இந்தியாவில் அதிகமான வரிப்பங்களிப்பைச் செய்யும் முதன்மையான மாநிலங்களுள் ஒன்று. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உரிய நிதிப்பகிர்வை தீர்மானிப்பதில் தொடர்ந்து ஓரவஞ்சனை காட்டப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
- இதையும் படிங்க: சிறுவனை தாக்கிய வழக்கு; பின்னணிப் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்!
- வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உரிய முறையில் நிர்ணயித்து, அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
- இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்தபோதும், கரோனா காலத்திலும் அதிகப்படியான பொருளாதார உதவிகளை வழங்கியது இந்தியாதான். அந்த உதவியில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும் அடங்கும். இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்வதையோ, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவதையோ இனியும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
- மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். பன்மைத்துவ தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
- தேர்தல்களில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்க வேண்டும். இந்த மாற்றத்தின் வழியாக பொதுவாழ்வில் ஈடுபடவும், மக்கள் சேவையாற்றவும் லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்வருவார்கள்.
- அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை (Universal Basic Income Card)’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்