சென்னை: சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு, விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ, "எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத வாய்ப்பு பெற்ற தொகுதி சென்னை மேற்கு மாவட்டம் தான். ஏனென்றால் தலைமையிடம் நெருக்கமாக இருப்பது நாம் தான். பாமர மக்களுக்காக போராடியும் கார்ப்ரேட் நிறுவனங்களின் முகமுடியை நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் கிழித்து கொண்டுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டம், பிற மாவட்டத்திற்கு வழிகாட்டியாகவும், முதன்மையாகவும் உள்ளது. அதன் எடுத்துக்காட்டாக தான் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று போடப்பட்டுள்ள தீர்மானம். உலக அளவில் கொண்டு செல்ல ஃபார்முலா கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி பயன்படுத்தி கொண்டார்'' என்றார்.
பின்னர் பேசிய எம்பி தயாநிதி மாறன், "தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த முடியாது சொன்னவர்கள் மத்தியில் மூன்றே மாதத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி சாதனை படைத்தார். அதே போல் கேலோ இந்தியா போட்டியில் 36வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, நமது அரசு பொறுப்பேற்ற பின் 3வது இடத்திற்கு உயர்ந்தது.
நடத்தவே முடியாது என்று சொன்ன ஃபார்முலா கார் பந்தயதை நடத்தி, உலகம் முழுவதும் உள்ளவர்களின் பார்வையை தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாம்ம் தமிழ் மொழி, ஆங்கிலம் மொழி மட்டுமே படித்து உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் பதவிகளில் நம் தமிழர்கள் தான் உள்ளனர். ஆனால் இவர்கள் சொல்லும் மூன்றாம் மொழியாக இந்தியை படித்து இருந்தால் வேலை இல்லாமல் தான் இருந்து இருப்போம்.
சென்னை மேற்கு மாவட்டம் பொது உறுப்பினர்கள் கூட்டம் pic.twitter.com/RcHJjqivEf
— Ezhilan (@Dr_Ezhilan) September 2, 2024
மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தராது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஃபார்முலா கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பது திராவிட அரசு வந்த பிறகு தான் கிடைத்தது.
இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக உள்ளது மனித வளம் தான். அதில், படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். இதை பொறுக்க முடியாமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திணிக்க பார்க்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக நேரடியாக போட்டியிடும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : மாநில அரசியலில் நுழைவது எப்போது? எதிர்பாராத பதிலளித்த கனிமொழி! - kanimozhi about state politics