திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூரைச் சேர்ந்தவர் ஹேமநாத். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லாரியை சர்வீஸ் அலுவலகத்தில் உள்ளே எடுத்துச் சென்றபோது, லாரி அங்கிருந்த ஷட்டரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஹேமநாத் சேதமடைந்த ஷட்டரை சரி செய்ய முற்படும்போது, எதிர்பாராத விதமாக ஷட்டர் ஹேமநாத் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஹேமநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர், ஷட்டர் விழுந்து மரணமடைந்த ஹேமநாத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், லாரி சர்வீஸ் நிர்வாகத்தினர் உரிய நிவாரணம் ஏதும் வழங்கவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து ஹேமநாத்தின் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹேமநாத்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, லாரி சர்வீஸ் அலுவலக உரிமையாளர்களிடம் இது குறித்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!