சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ள காவேரிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், அதே பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இந்த பகுதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரமேஷ் நடத்தி வரும் முடி திருத்தும் கடைக்குச் சென்று உள்ளார். அப்போது அந்தக கடைக்காரர், “நீங்கள் புகார் வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு நான் முடி திருத்த மாட்டேன், அவ்வாறு நான் முடி திருத்தினால் என்னிடம் வேறு நபர்கள் யாரும் முடிதிருத்த வர மாட்டார்கள்” எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, இரண்டாவது நாளாக தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தைக்கு முடி வெட்டுமாறு மீண்டும் அதே கடைக்குச் சென்ற நிலையில், முடி திருத்தம் செய்பவர் ‘தன்னுடைய உழைப்பில் மண்ணள்ளிப் போட வேண்டாம். தயவு செய்து சென்று விடுங்கள். உங்களுக்கு முடி வெட்ட முடியாது’ என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த நபர், வீடியோ ஆதாரத்துடன் சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்துவிடம் புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து, புகார் அளித்த நபரிடம் பேசும்போது, “முடி வெட்டவில்லை என்றால் விட வேண்டியது தானே. ஏன் அவரிடம் மீண்டும் மீண்டும் சென்று தகராறு செய்கிறீர்கள்?
முடி வெட்டுவது அவருடைய விருப்பம். உங்களுக்கு முடி வெட்டினால் அவருக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்று அவர் பயப்படுகிறார். நீங்கள் கடையை வைத்துக் கொண்டு, அவரிடம் சண்டைக்குச் சென்றால் எப்படி இருக்க முடியும்? அவருக்கு முடி வெட்ட விருப்பம் இல்லை என்றால், நீங்கள் வேறு கடைக்குச் சென்று விட வேண்டியதுதானே” எனக் கூறியுள்ளார். காவல் கண்காணிப்பாளர் பேசியதாக பரவி வரும் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்- 60 பேர் மீது வழக்குப்பதிவு!