சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்தரநாத் இன்று (ஜூலை 31) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 11 தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தடுப்பூசிகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதை கைவிடும் செயலாகும். இது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய தொற்று நோய்களின் பரவலை அதிகப்படுத்தும். இது தமிழக மக்களின் நலன்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக மாறும். தேசிய சுகாதார இயக்கம் (NHM), உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி மூலதனம் ஆகியவற்றின் தனியார்மயமாக்கல் கொள்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்று நடைமுறைப்படுத்த முயல்வது ஏற்புடையதல்ல. அம்முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.
பேறுகால விவகாரம்: தமிழ்நாட்டின் பேறுகால தாய்மார்களின் மரண விகிதம் 45.5 ஆக குறைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பேறுகால தாய்மார்களின் மரணம் ஒன்று கூட நடைபெறவில்லை என்ற செய்தி பாராட்டுக்குரியது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 14.5 ஆகவும், வேலூர் மாவட்டத்தில் 20.5 ஆகவும், பேறுகால தாய்மார்கள் மரணங்கள் குறைந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவுகின்ற இக்காலக் கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற மகப்பேறு மருத்துவர்களின் பணியாளர்களின் இத்தகைய சாதனை மகத்தானது, பாராட்டுக்குரியது.
இருப்பினும், அரசுப் புள்ளி விவரங்களில் மாவட்ட அளவில் பேறுகால தாய்மார்கள் மரணங்களில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 77 ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 72 ஆகவும் உள்ளன. இது போன்று சில மாவட்டங்களில் பேறுகால தாய்மார்கள் மரணம் மிக அதிகமாக இருக்கின்றன என்பது கவலை அளிக்கிறது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.
பிற மாநிலங்களை ஒப்பிடும்பொழுது, தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 62 மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 37 மாவட்ட மருத்துவமனைகள், 256 தாலுகா மருத்துவமனைகள், 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அடிப்படை கட்டமைப்பு வலிமையாக உள்ளது.
அவ்வாறு இருந்தாலும் பேறுகால தாய்மார்களின் மரண விகிதங்கள் குறைவது என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் போதுமானதாக இல்லை. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து களைவதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். கேரளாவில் 19, மகாராஷ்டிரா 33, தெலங்கனா 44 என பிற மாநிலங்களில் பேறுகால தாய்மார்கள் மரண விகிதங்கள் குறைவாக உள்ளன.
ஆகவே, திறந்த மனதுடன் ஆழமாக ஆராய்ந்து தமிழக பேறுகால தாய்மார்களின் மரண விகிதத்தை மேலும் குறைப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் மகப்பேறு, மயக்க, குழந்தை மருத்துவர்கள், அறுவை அரங்கம், ரத்த வங்கி சேவைகள் இருக்கும் இடங்களில் மட்டுமே பிரசவங்கள் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 500க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன.
மகப்பேறு மருத்துவர்கள் பணிச் சுமையை தாள முடியாமல் அதிக அளவில் அரசுப் பணியிலிருந்து தொடர்ந்து விலகி வருகிறார்கள். அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 24 மணிநேரம் தொடர் பணியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணி இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கூட யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். அங்கு பணிபுரியும் மருத்துவர்களை எளிதில் தாக்கலாம் என்ற அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
மேலும், அரசுப் பணியில் இருந்து விலகும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மகப்பேறு மருத்துவர்களாக உள்ளனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு அதிகபட்சமாக காலையில் 8 மணி நேரமும், இரவில் 12 மணி நேரமும் மட்டுமே தொடர்ச்சியான பணி வழங்க வேண்டும். தொடர்ச்சியாக 24 மணி நேர பணி வழங்கக் கூடாது.
சிசேரியன் விவகாரம்: அண்மையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெண்கள் வேலை பார்ப்பது குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) குழந்தை பிறப்பது அதிகரித்துள்ளது என்ற கருத்தை கூறியுள்ளார். இது ஏற்புடையதல்ல. இது அறிவியலுக்கு புறம்பானது.
சமூக பொருளாதார மாற்றங்களின் காரணமாக, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெண்களுடைய வேலை முறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், அதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிரித்துள்ளது என்பது சரியல்ல.
இன்றும் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளை அதிகமாக செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர். வீட்டு வேலைகளை செய்வதோடு, சமூக உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். எனவே, பெண்கள் வேலை செய்வது குறைந்துள்ளது என்பது சரியல்ல.
மருத்துவ ரீதியான காரணங்களுக்காகவும், உடல் பருமன், நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்), மிகை இரத்த அழுத்தம், செயற்கை முறையில் கரு உருவாக்கம், குறை பிரசவம், எடை குறைந்த சிசுக்கள், இளம் வயதில் திருமணம் போன்ற காரணங்களால் சிசேரியன் அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மனிதர்களின் இயற்கையான பரிணாம வளர்ச்சியால் இரண்டு கால்களில் எழுந்து நின்றது, நடப்பது, அதன் காரணமாக இடுப்பு எலும்புகள் குறுகிப்போனது போன்ற பல்வேறு காரணங்களாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறப்பது அதிகரித்து இருக்கின்றது.
பிரசவ வலியை தவிர்க்கும் நோக்குடனும், குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற விருப்பங்களாலும் சிசேரியன் பிறப்புக்கள் அதிகரித்துள்ளன. மிக முக்கியமாக நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையேயான உறவு மோசமாகியுள்ளது. சிறிய பாதிப்புகளுக்கு கூட நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுகின்றனர். பெருந்தொகையை இழப்பீடாக கேட்கின்றனர். இப்போக்கு அதிகரித்து வருகின்றது.
அதுமட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களையும் தாக்கும் போக்கும் அவர்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இது போன்ற காரணங்களாலும் தற்காப்பு என்ற வகையில் சிகிச்சை (Defensive Practice) அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவும் சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிப்பிற்கு பெண்கள் வேலை செய்வது குறைந்ததுதான் காரணம் என கூறுவது ஏற்புடையதல்ல. இத்தகைய கருத்துக்களை தவிர்த்திட வேண்டும்.
அரசு மருத்துவர்கள், ஒரு சில குறிப்பிட்ட முதுநிலை மருத்தவப் படிப்புகளை மட்டுமே படிக்க முடியும் என்ற அரசாணையை (அரசாணை எண் 151) தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. அதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உட்பட பல்வேறு டாக்டர்கள் சங்கங்களும் எதிர்த்திருந்தன. இந்நிலையில், தற்பொழுது அந்த அரசாணையை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு நன்றி.
MRB தேர்வு: MRB தேர்வில் தேர்ச்சி பெற்று அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்று பல மாதங்களாக பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருந்த மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று பொது தரவரிசைப் பட்டியல் மற்றும் வகுப்புவாரி தரவரிசைப் பட்டியலை (General Rank List and Community Rank List) வெளியிட்டதற்கு நன்றி.
MRB தனது அனைத்து தேர்வுகளிலும் பொதுவான தரவரிசைப் பட்டியலையும், வகுப்பு வாரியாக தரவரிசைப் பட்டியலையும் தொடர்ந்து வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் சமூக நீதியை காக்கின்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
டெல்லியில் ஐஏஎஸ் தேர்விற்கான தனியார் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து மூன்று மாணாக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சோக நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. மரணமடைந்த அம்மாணாக்கர்களுக்கு அஞ்சலி. பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். நாடு முழுவதும் NEET, JEE, UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல் இசை, பாட்டு, மொழி, நடனம், அபாகஸ், செஸ், கணிணி போன்ற பலவற்றிற்கும் பயிற்சி வழங்கும் தனியார் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இத்தகைய மையங்களில் அவ்வப்பொழுது பல்வேறு விபத்துக்கள் நடக்கின்றன. மாணவர்கள் பாதிக்கப்படுவதும், இறப்பதும் நடக்கின்றன. மனித உரிமை மீறல்களும், தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. கட்டணக் கொள்ளைகளுக்கு அளவே இல்லை.
எனவே, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையங்களை பதிவு செய்வதும், ஒழுங்குபடுத்துவதும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாணவர்களின் உடல் மற்றும் உள நலனை பாதுகாப்பதும், கட்டணங்களை நிர்ணயிப்பதும் அவசியமாகும். அதை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும்.
உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிகக் கடுமையான போட்டியை இன்றைய முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. இக்கடும் போட்டியின் காரணமாக மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நோக்கி தள்ளப்படுகின்றனர்.
போதிய வசதிகள் இல்லாத, பாதுகாப்பு இல்லாத, காற்றோட்டம் இல்லாத, நெருக்கடியான இடங்களில் பயிற்சி பெறும் நிலைக்கு மாணவர்கள் உள்ளாகின்றனர். இந்நிலை போக்கப்பட வேண்டும். ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் நேரடி பயிற்சி மையங்கள் செயல்படுவது இன்றைக்கு சமூக எதார்த்தமாக உள்ளது. அவற்றை தடை செய்துவிட இயலாது. இந்த எதார்த்த உண்மையை புரிந்துகொண்டு தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளே ஏழை மாணவர்களுக்கு இலவசமான பயிற்சி மையங்களை தொடங்கிட வேண்டும். தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்துவது குறித்து ஒரு நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும். அதன் பரிந்துரை அடிப்படையில் தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்த உரிய சட்டத்தை அரசு கொண்டு வந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: "சிசு மற்றும் மகப்பேறு மரணம் பூஜ்ஜியத்தை எடுக்கும் நிலை ஏற்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - Minister Ma Subramanian