ராமநாதபுரம்: திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்புல்லாணியைச் சேர்ந்த க.மணிமேகலை, சோ.திவ்யதர்ஷினி, செ.கனிஷ்காஸ்ரீ ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள் விடுமுறையில் வீட்டின் முன் மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது பழமையான காசு கிடைத்ததாக மன்றச் செயலர் வே.ராஜகுருவிடம் கொடுத்தனர்.
அந்தக் காசையும் அது கிடைத்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்த பின், தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான வே.ராஜகுரு கூறியதாவது, "மாணவிகள் கொடுத்தது, முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசு ஆகும். அவ்விடத்தில் கள ஆய்வு செய்தபோது சீனநாட்டு போர்சலின் ஓடு, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கசடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள் கிடைத்தன.
இதையும் படிங்க: 'வரலாறு முக்கியம் அமைச்சரே'.. சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுவது என்ன?
இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறை உள்ளது. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் 'ஸ்ரீராஜராஜ' என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசின் ஓரங்கள் தேய்ந்துள்ளன.
முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டன. இது செம்பாலான காசு. ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் அகழாய்வுகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.
இப்பள்ளி மாணவர்கள் ஏற்கனவே திருப்புல்லாணியைச் சுற்றியுள்ள பஞ்சந்தாங்கி, தாதனேந்தல், கோரைக்குட்டம் ஆகிய ஊர்களில் இக்காசுகளை கண்டெடுத்துள்ளனர். இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையின் கீழிருந்த நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
பழமையான காசைக் கண்டறிந்து பத்திரமாக ஒப்படைத்த மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் கோ.மகேந்திரன் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்