சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் (X) வலைதளர் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது: "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்". என குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் (X) வலைதளர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய மகளீர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், "ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம் எனவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்", எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து தமிழக அரசை விமர்சித்துப் பேசிய நிலையில், கள்ளச்சாராய விவகாரம் அரசியல் பூகம்பமாக வெடித்துள்ளது என அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.