சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கூடவே வீசிய வெப்ப அலையினால் பல நாட்களாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிப் போயிருந்தனர். இதற்கிடையே, வெயிலின் தாக்கத்தைப் போக்கும் விதமாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையைப் பொறுத்தவரை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.
சென்னையில் தினம்தோறும் 100 டிகிரி பாரன் ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டின் உள்ளே முடங்கினர். இந்நிலையில் தான் இன்று(மே.8) அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இதனால் தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், அடையார், எழும்பூர், கெல்லிஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், சென்னை வாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்..குளிரவைக்க வரும் கோடை மழை! அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு - TN Rain Update