சென்னை: திருவள்ளூர், கவரப்பேட்டை பாக்மதி ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் விரைவில் குற்றம் செய்தவர்கள் யார்? என்பது குறித்தான தகவல் வெளியிடப்படும் எனவும் ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் தீவிர சோதனை: நாடு முழுவதும் டிசம்பர் 6ஆம் தேதியான நேற்று பாபர் மசூதி இடிப்பு (Demolition of the Babri Masjid) தினத்தையொட்டி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே ரயில் நிலையத்துக்குள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள அரசு இருப்புப் பாதை காவல் நிலையத்தையும் ஆய்வு செய்த டிஜிபி குற்ற வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கஞ்சா பறிமுதல்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள், "அரசு இருப்புப் பாதை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்றங்களில், வழக்குப் பதிவு செய்து தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களையும், இருப்புப்பாதை சொத்துக்களையும் பாதுகாத்து வருகிறோம். கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் முதல் நேற்று வரை போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடை சட்டத்தின் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 56.7 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரேசன் அரிசி பறிமுதல்: மேலும், கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் முதல் டிச.5 ஆம் தேதி வரை ரயில்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட இருந்த சுமார் 3,025 கிலோ ரேசன் அரிசி (PDS Rice) பரிமுதல் செய்யப்பட்டு, 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
குற்றவாளியை நெருங்கி விட்டோம்: தொடர்ந்து பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து சம்பந்தமாக அனைவரிடமும் விசாரணை நிறைவு பெற்று, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியான விசாரணை பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளோம். ரயில்வே போலீசார், இருப்புப் பாதை போலீசார், மாவட்ட காவல் நிர்வாகம் என அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

விரைவில் குற்றம் செய்தவர்கள் யார்? என்பது குறித்தான தகவல் வெளியிடப்படும். மேலும், கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு வேறு ஒரு கண்ணோட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்டக் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபரி மலைக்கு சென்ற சேலம் ஐயப்ப பக்தர்கள் பேருந்து விபத்து; ஒருவர் பலி, 16 பேர் காயம்..!
கவரப்பேட்டை ரயில் விபத்து: அதாவது, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீவிர விசாரணையில் முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணம், மனிதத் தவறுகளால் நடந்திருக்க வாய்ப்பில்லை என ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரயில் பாதையில் லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் ஆகியவற்றை கழற்றியதே விபத்துக்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டது. அதனால், இந்த விபத்து சதி வேலையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.