சென்னை: தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட சமூகத்திற்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் 1996 நடந்ததை போல மாறிவிடும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "தமிழ்நாடு அளவில் பட்டியலினம் (scheduled caste) என்று அழைக்கக்கூடிய பட்டியலில் 26 சாதிகள் இருக்கின்றன. இதில், தேவேந்திர குல வேளாளர், பறையர், அருந்ததியர் என முக்கிய சமூகத்தினர் உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பட்டியலில் சேர்ப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தினோம்.
7 உட்பிரிவு சாதிகளை உள்ளடக்கிய சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவர்களை இதுவரையில் பட்டியல் சமூக பிரிவிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. பட்டியல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், கிட்டத்தட்ட 56 துறைகளில் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை. இது குறித்து 6 மாதங்களாக ஆராய்ச்சி செய்தோம்.
2009-ல் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். ஒரு சமூகம் பின்னடைந்து இருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவர்களுக்கு உதவி செய்வது தவறு இல்லை. தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு சிறு துறைகளில் கூட வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
பட்டியலின மக்களுக்கு கொடுக்கப்படும் 18 சதவீதத்தில், அருந்ததியர்களுக்கு கொடுக்கப்படும் 3 சதவீதத்திற்கும் எந்த எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை. தற்போது முன்னுரிமையில் பட்டியலினம் (SC) என்ற இடத்தில் SC(A) என்று ஆகிவிட்டது. தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதி திராவிட பழங்குடியினருக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அருந்ததியினர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 2009-ல் உள் ஒதுக்கீடு, எந்த சமுதாயத்திற்கு எவ்வளவு இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அருந்ததியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். அவர்களுக்கு மட்டும் அதிக அளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
பட்டியலின பட்டியலில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினர் எத்தனை பேர் உயர் பதவியில் உள்ளார்கள் என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பட்டியலின மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்குச் சென்றடையவில்லை.
தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடுகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் 1996 நடந்ததை போல மாறிவிடும்" இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?