புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதன்படி, இதுவரை 500 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில், இதுவரை 330 நபரிடம் விசாரணை நடத்தி நேரடி சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், மனித மலம் கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை எடுத்து சந்தேகத்திற்கிடமான 31 நபர்களுக்கு இதுவரை டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது, சம்பவம் நடந்தபோது பகிரப்பட்ட வாட்ஸ் அப் ஆடியோவில் இருந்த குரல் பதிவுகளை சேகரித்து, அது யாருடைய குரல் என்பதை உறுதி செய்வதற்கு, குரல் மாதிரி பரிசோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்து, 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'I am waiting' என கையில் லத்தியுடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.. திருச்சி எஸ்பி வருண்குமாரை கண்டு கதி கலங்கும் சமூக விரோதிகள்!
ஆனால், இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மனுவை விசாரித்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத சூழலில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு மீண்டும் சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்.19) மீண்டும் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.