தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதிகள் நிறைந்ததாக உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால் வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளுக்கு தேவையான உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் வனவிலங்குகள் தற்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் பகுதிக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.
இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே இடையூறுகள் ஏற்பட்டு, மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் வனத்திலிருந்து யானைகள் வெளியேறி வருவது அவர்களால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன், 1 பெண் யானை உட்பட மூன்று யானைகள் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறி பி.அக்ரஹாரம், ராஜாகொல்லஹள்ளி, சோம்பட்டி வழியாக உலா வந்த யானைகள் தற்போது மல்லாபுரம் ஏரியில் தஞ்சமடைந்துள்ளது.
வனத்துறையினர் தீவிரமாக யானைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மூன்று யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழைந்திருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றன. மேலும் யானைகளை இன்று மாலைக்குள் வனப்பகுதிக்குள் விரட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐஸ் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்! - Lok Sabha Election 2024