திருவாரூர்: முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆலங்காடு கிராம எல்லையில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்தது. தற்போது நகரில் குப்பைகள் அதிகளவில் சேருவதால் இந்த குப்பைக் கிடங்கு போதுமானதாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுவற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் அன்றாடம் சேரும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் முத்துப்பேட்டை எல்லை, கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டி வருகிறது. இதனால் கோவிலூர் ரவுண்டானா முதல் சாலையோரம் வரை குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன.
இந்நிலையில், அக்குப்பைகளுக்கு ஒரு சிலர் தீயிட்டுச் செல்வதால் அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவில் புகை சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் கொண்டு பல மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இதுபோன்று, இச்சம்பவம் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த குப்பைக் கிடங்கில் மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதால், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து, பேரூராட்சிக்கு நிரந்தர குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல், இப்பகுதி போக்குவரத்து நலன் கருதி சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி மறுசுழற்சிக்கு அனுப்புவதுடன், தற்போது சாலையோரம் சுமார் 3 அடி தூரத்திற்கு உள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத வாய்க்கால்கள்.. 150 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை! - Canel Issue In Thiruvarur