சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் குமார் என்பவரும் அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் உதய தாட்சாயினி, தங்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் ஆஜராகி, விசாரணைக்கு ஆஜராகுமாறு மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், குறிப்பிட்ட முகவரியில் இருவரும் இல்லாததால் சம்மன் சென்றடையவில்லை எனவும் கூறினார்.
இதனையடுத்து, இருவரையும் நாளை மறுநாள் (ஜூன் 04) காலை பத்து மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் வசிக்கும் இடம் குறித்த விவரங்களையும், மிரட்டல் விடுக்கும் நபர்களின் விவரங்களையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த தகவல்களின் அடிப்படையில், தேவைப்படும் பட்சத்தில் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வசூலில் சாதனை படைத்த சேலம் கோட்டம்... எவ்வளவு கோடி தெரியுமா?