சென்னை: அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 7,600 தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை) உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலமாக குழந்தைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களின் பட்டியல் பள்ளியில் எழுதப்பட்டு, மே 30ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 636 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் உள்ள 6,291 இடங்களில் சேர்வதற்கு 10,342 விண்ணப்பங்களில் 9,064 தகுதியான விண்ணப்பங்களாக கண்டறியப்பட்டது. அவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து நேரடியாக குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெற்றோர் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் செய்யும் போதே கூகுள் மேப் மூலம் மாணவர்களின் இருப்பிடம் மற்றும் பள்ளிக்கு இடையே உள்ள தூரம் கணக்கிடப்பட்டு, தகுதியான மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைன் விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
7,600 தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்களின் விவரம் பள்ளிகள் வாரியாக https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டன. தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விவரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விவரத்தையும் மே 27ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: மாதவிடாய் சமயத்தில் பெண்கள் செய்ய வேண்டியது என்ன? - மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா கூறும் அறிவுரை!